சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த முதலமைச்சரின் தனிப்பிரிவு புகார் பெட்டி திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. இனி பொதுமக்கள் பழைய நடைமுறையின்படியே தலைமைச் செயலகத்திற்குள் நேரடியாகச் சென்று, முதலமைச்சரின் தனிப்பிரிவில் தங்களது புகார் மனுக்களை அளிக்கலாம் என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக இந்த புகார் பெட்டி முறை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது அது முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

​தலைமைச் செயலகத்திற்கு வெளியே புகார் பெட்டி வைக்கப்பட்டதால், பொதுமக்களால் அதிகாரிகளிடமோ அல்லது முதலமைச்சரிடமோ நேரடியாக மனுக்களைக் கொடுத்துத் தங்களது குறைகளை விளக்கிக் கூற முடியவில்லை என்று கடும் எதிர்ப்புகள் கிளம்பின. பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்து எழுந்த இந்தத் தொடர் புகார்களைத் தொடர்ந்து, தற்போது பழைய நடைமுறையே மீண்டும் அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அரசின் இந்த உடனடி மாற்றத்திற்குப் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.