2026 பிபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவின் பயிற்சி ஆட்டங்களின் போது, போர்ச்சுகல் அணியின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்த நெகிழ்ச்சியான செயல் உலக அளவில் வைரலாகி வருகிறது. உலகக் கோப்பை தொடருக்காக போர்ச்சுகல் அணியினர் தீவிர ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, மைதானத்தின் ஓரமாக நின்றுகொண்டிருந்த சர்வதேச ஊடகவியலாளர்கள் அவர்களை உன்னிப்பாகக் கவனித்து வந்தனர். அப்போது அங்கு வந்த கொலம்பியா நாட்டைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர், ஓட்டப் பயிற்சியை முன்னின்று வழிநடத்திய 41 வயதான உலகப் புகழ்பெற்ற நட்சத்திர வீரர் ரொனால்டோவைப் பார்த்துக் உற்சாகமாகக் கையாட்டியுள்ளார்.

 

யாரும் எதிர்பாராத விதமாக, அந்தப் பெண் பத்திரிகையாளரைக் கவனித்த ரொனால்டோ, பதிலுக்கு அவரைப் பார்த்துப் புன்னகைத்துத் தனது கையை அசைத்தார். கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான ரொனால்டோவின் இந்த எளிய அங்கீகாரத்தைக் கண்ட அந்தப் பெண், முதலில் துள்ளிக் குதித்துக் கொண்டாடினார். ஆனால், அடுத்த சில நொடிகளில் உணர்ச்சிவசப்பட்ட அவர், ஆனந்தக் கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார். அருகில் இருந்த சக பத்திரிகையாளர்கள் அவரைத் தேற்றினர். மேலும்  41 வயதிலும் தனது 6-ஆவது உலகக் கோப்பைத் தொடரில் விளையாடி வரலாறு படைக்கக் காத்திருக்கும் ரொனால்டோவின் இந்த எளிய குணமும், அந்தப் பெண்ணின் நெகிழ்ச்சியான எதிர்வினையும் தற்போது இணையத்தில்  ட்ரெண்டிங்காக வலம் வருகிறது.