எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் அதிரடி துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிர்ஷ்டத்தின் உதவியோடு 68 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இந்த ஆட்டத்தின் போது பாகிஸ்தான் வீராங்கனைகள் செய்த மோசமான ஃபீல்டிங் தவறுகளால் மந்தனாவிற்கு இருமுறை பொன்னான வாய்ப்புகள் கிடைத்தன. ஆட்டத்தின் 8-வது ஓவரில் மந்தனா 7 ரன்கள் எடுத்திருந்தபோது கொடுத்த சுலபமான கேட்ச் வாய்ப்பை பாகிஸ்தான் வீராங்கனை அலியா தவறவிட்டார். இதனைப் பயன்படுத்தி நிலைத்து நின்று ஆடிய மந்தனா, பாகிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.

 

பாகிஸ்தான் அணியின் ஃபீல்டிங் சொதப்பல் இதோடு நிற்கவில்லை. ஆட்டத்தின் 13-வது ஓவரில் மந்தனா அடித்த பந்து எல்லைக்கோடு அருகே நின்றிருந்த சாய்ரா என்பவரிடம் தஞ்சம் புகுந்தது. ஆனால், கையில் வந்த பந்தை அவர் கோட்டை விட்டது மட்டுமின்றி, அது சிக்ஸராகவும் மாறியது. இந்த இரு பெரும் தவறுகளால் பாகிஸ்தான் அணிக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் ஆண்கள் கிரிக்கெட் அணியின் மோசமான ஃபீல்டிங் பாரம்பரியம் இப்போது பெண்கள் அணிக்கும் தொற்றிக்கொண்டு விட்டதாகக் கூறி, சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் மீம்ஸ்களைப் பறக்கவிட்டு பாகிஸ்தான் அணியை வளைத்து வளைத்து வறுத்தெடுத்து வருகின்றனர்.