ஒரு தேர்வுக்காக ஒட்டுமொத்த நாடே ஸ்தம்பிப்பது, பெற்றோர் தங்களின் வேலைகளுக்கு விடுப்பு எடுத்துவிட்டு தேர்வு மையங்களுக்கு வெளியே சிவப்பு நிற ஆடைகளுடன் காத்துக்கிடப்பது, பிள்ளைகளின் கைகளில் சூரியகாந்திப் பூக்களைக் கொடுத்து வரவேற்பது போன்ற விசித்திரமான சம்பவங்கள் நம் அண்டை நாடான சீனாவில் அரங்கேறியுள்ளன. சீனாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘காவோகாவ்’ என்ற தேசிய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு, வெறும் மாணவர்களுக்கான தேர்வு மட்டுமல்ல; அது ஒட்டுமொத்த குடும்பத்தின் கனவு மற்றும் கௌரவத்திற்கான போராகக் கருதப்படுகிறது.

இந்த ஆண்டு ஜூன் 7 முதல் ஜூன் 10 வரை நடைபெற்ற இந்தத் தேர்வில், சுமார் 1.29 கோடி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இத்தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சீனாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் உயர் கல்விக்கான சேர்க்கை கிடைக்கும் என்பதால், மாணவர்களின் வாழ்நாளின் மிக முக்கியத் தேர்வாக இது பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சிறிய நகரங்கள் மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் தலையெழுத்தையே மாற்றும் ஒரு பெரும் வாய்ப்பாக இத்தேர்வு அமைகிறது.

இந்தத் தேர்வு நடக்கும் நாட்களில் சீன கலாச்சாரத்தின்படி சில சுவாரசியமான நம்பிக்கைகளும் பின்பற்றப்படுகின்றன. தேர்வு எழுதச் செல்லும் பிள்ளைகளின் அதிர்ஷ்டத்திற்காகவும், அவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காகவும், தேர்வு மையத்திற்கு வெளியே காத்திருக்கும் பெரும்பாலான தாய்மார்கள் மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் அடையாளமான ‘சிவப்பு நிற’ ஆடைகளை அணிந்து பிரார்த்தனை செய்கின்றனர்.

தேர்வு முடிந்து வெளியே வரும் மாணவர்களின் கைகளில் வெற்றி மற்றும் பிரகாசமான எதிர்காலத்தின் குறியீடான ‘சூரியகாந்தி’ பூங்கொத்துகள் கொடுத்து உற்சாகமாக வரவேற்கப்படுகிறார்கள். இத்தேர்வின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் எவ்வித இடையூறும் இன்றி தேர்வு மையங்களுக்குச் செல்ல போக்குவரத்து விதிகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படுகின்றன. தேர்வு மையங்களைச் சுற்றி வாகனங்கள் ஹாரன் எழுப்பவோ அல்லது சத்தம் போடவோ அந்நாட்டு அரசு கடுமையான தடை விதித்துள்ளது. ஒட்டுமொத்த காவல் துறையும் உள்ளூர் நிர்வாகமும் இந்தத் தேர்வுக்காகவே முழு வீச்சில் களமிறக்கப்படுவதால், சீனாவில் இத்தேர்வு ஒரு உணர்வுபூர்வமான திருவிழாவாகவே கொண்டாடப்பட்டு வருகிறது.