இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் ஆன்மீக மற்றும் உச்ச தலைவரான அயதுல்லா அலி காமேனியின் உடல், வரும் ஜூலை 9-ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. கடந்த பிப்ரவரி 28 அன்று நடைபெற்ற பயங்கர ஏவுகணைத் தாக்குதலில் காமேனி உயிரிழந்த நிலையில், அதைத் தொடர்ந்து வெடித்த பிராந்தியப் போர் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் அவரது இறுதிச்சடங்கு கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக ஒத்திவைக்கப்பட்டு வந்தது. தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ள சூழலில், இந்த இறுதி ஊர்வல கால அட்டவணையை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது.

இதன்படி, காமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் வரும் ஜூலை 4-ஆம் தேதி தலைநகர் டெஹ்ரானில் தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து ஜூலை 7 அன்று புனித நகரான கோமிலும்  இறுதியாக ஜூலை 9-ஆம் தேதி காமேனியின் சொந்த ஊரான மஷாத் நகரில் உள்ள இமாம் ரெஸா புனிதத் தலத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. 37 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானை வழிநடத்திய ஒரு முக்கிய தலைவரின் இந்த இறுதி ஊர்வலத்தில் சுமார் 2 கோடிக்கும் அதிகமான பொதுமக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.