மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரி பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில், வாடிக்கையாளர்கள் போல வந்த இருவர் செய்த கைவரிசை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடைக்கு வந்த அந்த மர்ம நபர்கள், விதவிதமான நகைகளைக் காண்பிக்குமாறு விற்பனையாளரிடம் கேட்டுள்ளனர். அவர்கள் காட்டிய நகைகளைத் துல்லியமாக ஆய்வு செய்வது போல் நடித்து, தந்திரமாக உண்மையான தங்கத் தோடு ஒன்றை எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக அதே அளவிலான பித்தளைத் தோடு ஒன்றை வைத்துவிட்டு மின்னல் வேகத்தில் தலைமறைவாகியுள்ளனர். கடை ஊழியர்கள் எவ்விதச் சந்தேகமும் இன்றி அவர்களை அனுப்பி வைத்துள்ளனர்.

 

#WATCH | Two Men Posing As Customers Steal Gold Earrings From A Jewellery Shop In MP’s Shivpuri; Swap Them With Brass Ones #MadhyaPradesh #IndiaNews pic.twitter.com/zfJgCYxTC6

— Free Press Madhya Pradesh (@FreePressMP) June 12, 2026

 

சிறிது நேரம் கழித்து, நகை கவுண்டரைச் சரிபார்த்த ஊழியர்களுக்குத் தங்கம் காணாமல் போனதும், அதற்குப் பதிலாகப் பித்தளைத் தோடு இருந்ததும் தெரியவந்தது. உடனடியாக இது குறித்துக் கடையின் உரிமையாளர் காவல்துறையில் புகார் அளித்தார். கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவை (சிசிடிவி) ஆய்வு செய்தபோது, அந்த நபர்கள் தந்திரமாகக் கைவரிசை காட்டிய காட்சிகள் பதிவாகியிருந்தது. இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. கொள்ளையர்களின் இந்தத் தந்திரமான திருட்டைக் கண்டு நகைக்கடை உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிசிடிவி ஆதாரங்களைக் கொண்டு அந்த இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.