பிரிட்டனில் உள்ள லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியக விஞ்ஞானிகள் நடத்திய புதிய ஆய்வில், சுமார் 415 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, உலகின் மிகப்பெரிய தேள் இனம் கண்டறியப்பட்டுள்ளது. ‘பிரேஆர்க்டூரஸ் கிகாஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வரலாற்றுக்கு முந்தைய காலத்துத் தேள், ஒரு நாய் அளவுக்குப் பெரியதாக, அதாவது சுமார் 1 மீட்டர் நீளம் கொண்டதாக இருந்துள்ளது.
இதன் உடலின் மற்ற பகுதிகளை விட, இதன் கொடுக்குகள் மட்டுமே 16 சென்டிமீட்டர் நீளம் கொண்டவை. 1870-ஆம் ஆண்டிலேயே இதன் புதைபடிவங்கள் கண்டறியப்பட்டாலும், நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் தற்போதுதான் இது ஒரு பிரம்மாண்டமான தேள் வகை என்பது தற்கால விஞ்ஞானிகளால் முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் பூமியில் காடுகளோ அல்லது பாலூட்டிகள் போன்ற பெரிய விலங்குகளோ உருவாகாத காலகட்டத்தில், இந்தத் தேள்கள் வாழ்ந்துள்ளன. அக்காலத்தில் நிலப்பரப்பில் போதிய உணவு மற்றும் சுற்றுச்சூழல் கட்டமைப்பு இல்லாததால், இவை நிலத்திலும் நீரிலும் வாழக்கூடிய இருவாழ்விகளாக இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் நண்டுகள் மற்றும் கடல் நண்டுகளைப் போன்ற உடல் அமைப்பைக் கொண்டுள்ள இந்தத் தேள், தனது பிரம்மாண்டமான வடிவத்தின் காரணமாக அன்றைய காலகட்டத்தில் நீர்நிலைகள் மற்றும் கரையோரப் பகுதிகளில் ஒரு டாப் பிரிடேட்டராக அதாவது உணவுச் சங்கிலியின் உச்சத்தில் இருந்த வேட்டைக்காரனாக வாழ்ந்திருக்கலாம் என அறிவியல் பூர்வமாகத் தெரியவந்துள்ளது.
