வேலூர் கோட்டை பூங்காவில், தனது ஆண் நண்பரின் பிறந்தநாளைக் வித்யாசமாகக் கொண்டாடத் துணிச்சலாக டிஎஸ்பி (DSP) போலீஸ் சீருடை அணிந்து கொண்டு வந்து பந்தா காட்டிய உமாமகேஸ்வரி (33) என்ற 3 பிள்ளைகளின் தாயை வேலூர் வடக்கு போலீசார் அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் நேமபந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த, 10-ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ள இந்த பெண்ணின் கணவர் ஒரு கூலித்தொழிலாளி ஆவார்; நேற்று மாலை உமாமகேஸ்வரி கச்சிதமாக டிஎஸ்பி யூனிஃபார்ம் அணிந்து கொண்டு அரசுப் பேருந்திலேயே ஏறி வேலூர் கோட்டைக்கு வந்து அங்கும் இங்குமாக ஒய்யார நடை போட்டுக் கொண்டிருந்தார்.

இவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மடக்கிய போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விடிய விடிய விசாரணை நடத்தினர்.

அதில், சென்னையில் வீட்டு வேலை செய்த போது இரண்டு இடங்களில் தங்கம் மற்றும் வைர நகைகளைத் திருடிய வழக்குகளில் சிக்கிய கில்லாடி திருடி இந்த உமாமகேஸ்வரி என்பதும், தனது ஆண் நண்பரை அசத்தவே இந்த போலி போலீஸ் வேடமிட்டு வந்ததும் அம்பலமானது;

மேலும் போலீசார் அவரது ஆண் நண்பரை போனில் தொடர்பு கொண்டு விசாரித்த போது, தனக்குத் நிஜமாகவே பிறந்தநாள் தான் என்றும் ஆனால் தான் கேக் வெட்ட கோட்டைக்கு வரவில்லை என்றும் கூறி போலீசாருக்கே அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

ஆண் நண்பர் வராத நிலையிலும் எதற்காக இந்த பெண் டிஎஸ்பி சீருடை அணிந்து கொண்டு சுற்றினார், இந்த ஆடம்பர யூனிஃபார்ம் இவருக்கு எப்படிக் கிடைத்தது என்பது குறித்து உமாமகேஸ்வரியின் கணவரை நேரில் வரவழைத்து போலீசார் தற்போது தீவிரமாகத் துப்புத் துலக்கி வருகின்றனர்.