மும்பை கே.இ.எம் (KEM) மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் செஜல் பவார், நகைச்சுவை நடிகர் பிராணித் மோரின் ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது உடற்கூறியல் வகுப்பு மற்றும் நன்கொடையாகப் பெறப்பட்ட இறந்த உடல்கள் குறித்துப் பேசிய சில கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. உடற்கூராய்வு செய்யும் போது மருத்துவர்கள் இதுபோன்று கிண்டல் செய்வார்களா என்று நடிகர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த செஜல் பவார், தாங்கள் படிக்கும் காலத்தில் இறந்த உடல்களின் ரகசிய உறுப்புகளின் அளவுகளை ஒப்பிட்டுப் பேசுவோம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மருத்துவக் கல்விக்காகவும் ஆராய்ச்சிக்காகவும் தங்களது உடலைத் தானமாக வழங்கும் கொடையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் இந்த பேச்சு அமைந்துள்ளதாக மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், இது போன்ற பொறுப்பற்ற பேச்சுகள் எதிர்காலத்தில் உடல் தானம் செய்பவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, மருத்துவத்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைத்துவிடும் என்றும் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

கடும் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் குவிந்ததைத் தொடர்ந்து, மருத்துவர் செஜல் பவார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சமூக வலைதளங்களில் பரவி வரும் எனது வீடியோ கிளிப்பைப் பார்த்தேன், மக்கள் ஏன் என் மீது கோபமாக இருக்கிறார்கள் என்பதை என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது; யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை என்றாலும், நோக்கத்தை விட அதன் தாக்கம் தான் முக்கியமானது என்பதை நான் உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தனது பேச்சுக்கு எந்தவித சாக்குப்போக்கும் கூற விரும்பவில்லை என்றும், முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதாகவும் கூறிய அவர், பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோரியதோடு, இந்தச் சம்பவம் தனக்கு ஒரு பெரிய பாடம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது மருத்துவ நெறிமுறைகள் மற்றும் உடல் தானம் செய்பவர்களுக்கான மரியாதை குறித்த பெரிய விவாதத்தை சமூக வலைதளங்களில் கிளப்பியுள்ளது.