வேலையில்லை என்ற காரணத்தைக் காட்டி, ஒருவர் தனது பிள்ளைகளைப் பராமரிக்கும் தந்தை என்ற சட்டப்பூர்வ பொறுப்பிலிருந்து ஒருபோதும் பின்வாங்க முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புல்தானா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு, அவரது 10 மற்றும் 7 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் பராமரிப்புச் செலவுக்காக மாதம் தலா 4,000 ரூபாய் (மொத்தம் ரூ.8,000) ஜீவனாம்சம் வழங்குமாறு கீழ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தனக்கு தற்போது வேலை இல்லை என்றும், வாழ்வாதாரமாக இருந்த ஆட்டோ ரிக்ஷாவையும் விற்றுவிட்டதால் இந்தத் தொகையைத் தர முடியாது என்றும் கூறி, அந்த நபர் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரது கோரிக்கையை நிராகரித்தது.
பிள்ளைகளைச் சீராக வளர்ப்பதும், அவர்களுக்குத் தேவையான நிதி ஆதாரங்களை வழங்குவதும் ஒரு தந்தையின் மிக முக்கியமான சட்டப்பூர்வ மற்றும் தனிப்பட்ட கடமையாகும் என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் சுட்டிக்காட்டினர். கணவன்-மனைவிக்கு இடையே எத்தனைப் பிரச்சினைகள் இருந்தாலும், வளரும் வயதில் இருக்கும் பிள்ளைகளின் எதிர்காலத்தையோ அல்லது அவர்களின் அத்தியாவசியத் தேவைகளையோ பெற்றோரால் புறக்கணிக்க முடியாது என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியது.
மேலும், வேலையின்மை அல்லது குறைந்த வருமானம் போன்ற காரணங்களைக் காட்டி, பிள்ளைகளைப் பராமரிக்கும் பொறுப்பில் இருந்து எந்தவொரு தந்தையும் தப்பிக்கவே முடியாது என்று கூறி, கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
