கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே காடுகள், தோட்டங்கள் மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளிலும் பாம்புகளின் நடமாட்டம் அதிகரிப்பது வழக்கம். அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் கருப்பு நிறத்தில் வெள்ளை வரிகளைக் கொண்ட ‘கரெய்ட்’ (Common Krait – கட்டுவிரியன் வகை) என்ற விசித்திரப் பாம்பு குறித்த வீடியோ ஒன்று தீயாய் பரவி வருகிறது. இந்த பாம்பு இரவு நேரங்களில் மட்டுமே நடமாடும் என்றும், இது கடித்தால் வலியே தெரியாது என்பதால் தூக்கத்திலேயே பலரது உயிர் பிரிந்துவிடும் என்றும், இதனால் இது ‘சைலண்ட் கில்லர்’ என அழைக்கப்படுவதாகவும் அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. கரெய்ட் பாம்பின் பற்கள் மிகவும் சிறியதாக இருப்பதால், அது கடித்த வடுவோ அல்லது வலியோ உடனே தெரியாது என்பதால் மக்கள் சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருந்துவிடுகின்றனர்.
View this post on Instagram
இந்த வீடியோ லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், வீடியோவில் உள்ள சில தகவல்களை பாம்பு நிபுணர்கள் மறுத்துள்ளனர். கரெய்ட் பாம்பு கடித்தவுடன் மனிதர்கள் இறந்துவிடுவார்கள் என்பது உண்மையல்ல என்றும், இதன் விஷத்தில் உள்ள ‘நியூரோடாக்சின்’ நரம்பு மண்டலத்தை மெதுவாகவே பாதிக்கும் என்றும் அவர்கள் விளக்கியுள்ளனர். இந்த பாம்பு கடித்தால் ஆரம்பத்தில் வயிற்று வலி, உடல் சோர்வு, கண் இமைகள் தொங்குதல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தோன்றும். சரியான நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்று ‘ஆன்டி-வெனம்’ (Anti-venom) செலுத்திக் கொண்டால் 100% உயிரைக் காப்பாற்ற முடியும் என்பதால், பொதுமக்கள் மந்திரவாதிகளையோ அல்லது நாட்டு வைத்தியத்தையோ நம்பி நேரத்தை வீணடிக்காமல் உடனே அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
