தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள ‘கார்டிராக்’ என்ற நிறுவனத்தில், 29 வயதான ஜ்சினா த்லாத்லா என்ற பெண் கால் சென்டர் ஊழியராகப் பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களாக அவர் கடுமையான உடல்நலக்குறைவு மற்றும் சோர்வினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் தனது மேலாளரிடம் மருத்துவ விடுப்பு கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு விடுப்பு மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஜூன் 6-ஆம் தேதி சனிக்கிழமை அலுவலகத்திற்கு வந்த ஜ்சினா, அங்குள்ள கழிவறையிலேயே திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆபத்தான நிலையில் அவர் மயங்கிக் கிடந்தபோது, சாலையின் எதிர்புறம் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவரை உடனடியாக அழைத்துச் செல்லாமல், சிகிச்சைக்கான செலவை யார் ஏற்பது என்று அவரது மேலாளர் விவாதித்துக் கொண்டிருந்ததாக சக ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.
இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், நிறுவனம் இக்குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜ்சினா ஜூன் 1 அன்று மருத்துவ விடுப்பு எடுத்ததாகவும், அவர் சமர்ப்பித்த பல் மருத்துவரின் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளது.
மேலும், அவருக்கு விடுப்பு எதுவும் மறுக்கப்படவில்லை என்றும், அவர் அலுவலகத்திற்கு வெளியே சில தனிப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்ததாகவும், அதனை அவரது மேலாளர் ரகசியமாக கையாண்டார் என்றும் விளக்கம் அளித்துள்ளது. தங்களின் முன்னுரிமை தற்போது ஊழியரின் குடும்பத்திற்கு ஆதரவளிப்பதும், சக ஊழியர்களுக்கு மனநல ஆலோசனை வழங்குவதும்தான் என நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், கார்ப்பரேட் நிறுவனங்களின் வேலைப்பளு மற்றும் அலட்சியமே இந்த மரணத்திற்கு காரணம் என சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
— Cartrack (@CartrackZA) June 10, 2026
