பிரபல நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய பதிவு ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, ஜூன் 11-ஆம் தேதி காலை 9.30 மணிக்குத் தனது வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவு ஒன்றைப் பற்றிய அறிவிப்பை வெளியிடப் போவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்திருந்தார்.
இதனால் அந்த முக்கிய அறிவிப்பு என்னவாக இருக்கும், புதிய பட அறிவிப்பா அல்லது சமூக சேவை தொடர்பான முடிவா என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில், தமிழ் திரையுலகின் பிதாமகர், இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் திடீர் மறைவு செய்தி கேட்டு ஒட்டுமொத்தத் திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளதால், ராகவா லாரன்ஸ் தனது முக்கிய அறிவிப்பை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார்.
பாரதிராஜா சார் மறைவின் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஒத்திவைக்கப்பட்ட அந்த முக்கியமான அறிவிப்பு வருகிற வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குத் தனது சமூக வலைதளப் பக்கங்களின் வழியாக வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். மூத்த இயக்குநரின் மறைவுக்கு மதிப்பளித்து லாரன்ஸ் எடுத்துள்ள இந்த நெகிழ்ச்சியான முடிவுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வரும் அதே வேளையில், வெள்ளிக்கிழமை வரப்போகும் அந்த மாஸ் அறிவிப்பைக் காண ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இரட்டிப்பாகியுள்ளது.
