உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில், காதல் திருமணத்தால் குடும்பத்திற்குள் ஏற்பட்ட தீராத மனக்கசப்பும் தினசரி சண்டையும் ஒரு கோரமான விபரீதத்தில் முடிந்துள்ளன. அபிகாந்த் யாதவ் என்பவரின் காதல் திருமணத்தை அவரது குடும்பத்தினர், குறிப்பாக அவரது தாய் மிதிலேஷ் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், அவருக்கும் மருமகள் தீபான்ஷிக்கும் இடையே வீட்டில் தொடர் வாக்குவாதங்களும் மன உளைச்சல்களும் தினசரிப் போராட்டமாக நீடித்து வந்தன. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான சண்டையின் போது, ஆத்திரமும் விரக்தியும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த மோதலின் போது, மருமகள் தீபான்ஷி திடீரென தனக்குத்தானே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். மருமகளின் இந்த விபரீத முடிவைக் கண்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த மாமியார் மிதிலேஷும் உடனடியாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மேலும் ஒரே வீட்டில் மருமகள் உடல்கருகியும், மாமியார் விஷம் குடித்தும் உயிருக்கு போராடியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் இருவரையும் மீட்டு உடனடியாக உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
எனினும், இருவரின் நிலைமையும் மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக அவர்கள் உயர்தர மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
