ஆப்கானிஸ்தானின் கோஸ்ட், குனர் மற்றும் பக்திகா ஆகிய மாகாணங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்திய திடீர் வான்வழித் தாக்குதலில் 11 குழந்தைகள், ஒரு பெண், ஒரு முதியவர் உட்பட மொத்தம் 13 பொதுமக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். மேலும் 14 பேர் படுகாயமடைந்தனர். இக்கோரத் தாக்குதலை ஆப்கானிஸ்தான் தலிபான் அமைப்பின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கடுமையாகக் கண்டித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் ஒருமுறை ஆப்கானிஸ்தானின் எல்லையையும் இறையான்மையையும் மீறி, அப்பாவிப் பொதுமக்களின் வீடுகள் மீது குண்டுகளை வீசி மனிதாபிமானமற்ற போர்க்குற்றத்தை நிகழ்த்தியுள்ளது” என்று சாடியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் ஆப்கானிஸ்தான் நடத்திய எல்லைத் தாக்குதலுக்குப் பதிலடியாகவே பாகிஸ்தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் நிலையில், பாகிஸ்தான் தரப்பிலிருந்து இதுவரை இதற்கு முறையான விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை. பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்தும் டி.டி.பி (TTP) எனப்படும் பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் புகலிடம் அளிப்பதாகப் பாகிஸ்தான் குற்றம் சாட்டுவதும், அதனை ஆப்கானிஸ்தான் மறுப்பதுமே இரு நாடுகளுக்கும் இடையே பல மாதங்களாக நீடித்து வரும் இந்த எல்லைப் போருக்கு முக்கியக் காரணமாகும்.
மறுபுறம், ஆப்கானிஸ்தானுடன் எல்லையில் தொடர்ந்து போரிட்டு வரும் பாகிஸ்தான் ராணுவம், சர்வதேச அளவில் தனது நற்பெயரைக் காத்துக் கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தற்போது மூண்டுள்ள போரைத் தீர்த்து வைக்கத் தூதரக ரீதியாக நயவஞ்சக முயற்சியில் ஈடுபட்டு வருவது அம்பலமாகியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி போன்ற நாடுகளுடன் தங்களுக்குள்ள சுமுகமான உறவைப் பயன்படுத்தி, அமெரிக்கா-ஈரான் போரைத் தீர்க்கும் நடுநிலை நாடாகப் பாகிஸ்தானைக் காட்டிக் கொள்ளத் துடிக்கின்றனர்.
உள்நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடியும், அண்டை நாடுகளான இந்தியா, ஆப்கானிஸ்தானுடன் தொடர்ந்து எல்லையோர மோதல்களும் நிலவி வரும் வேளையில், உலக அரங்கில் தங்களின் இருப்பைத் தக்க வைக்கவும், பொருளாதாரச் சலுகைகளைப் பெறவும் பாகிஸ்தான் ராணுவம் காட்டும் இந்த ‘இரட்டை வேடம்’ சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
