இந்தியாவில் நடைபெறும் 2026 டி20 உலகக் கோப்பைப் போட்டியைப் புறக்கணிக்கும் முடிவு, வங்கதேச வீரர்கள் மற்றும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தால் கூட்டாக எடுக்கப்பட்டது என்ற முன்னாள் விளையாட்டுத் துறை இடைக்கால ஆலோசகர் ஆசிப் நஸ்ரூலின் வாதத்தை வங்கதேச நட்சத்திர வீரர் லிட்டன் தாஸ் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
பாதுகாப்புக் காரணங்களைக் கூறி இந்தியாவில் தங்கள் அணி விளையாடும் லீக் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் வங்கதேச கிரிக்கெட் வாரியம் கோரியிருந்தது. ஆனால், ஐசிசி நடத்திய சுயாதீனப் பாதுகாப்பு ஆய்வில் வீரர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனத் தெரியவந்தது. இருப்பினும் வங்கதேச வாரியம் தனது பிடிவாதத்தைக் கைவிடாததால், டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டது.
இவ்விவகாரம் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் வீரர்களைச் சந்தித்த ஆசிப் நஸ்ரூல், “நாட்டின் கிரிக்கெட் மற்றும் மக்களின் பாதுகாப்பு, தேசிய கௌரவத்தைக் காக்கவே வீரர்களுடன் இணைந்து கூட்டு முடிவு எடுக்கப்பட்டது” எனக் கூறியிருந்தார்.
இதனைப் பொய் என நிரூபிக்கும் வகையில் வங்கதேச நாளிதழான ‘புரோதோம் அலோ’-விற்கு லிட்டன் தாஸ் அளித்துள்ள பேட்டியில், “ஜனவரி மாதம் நடந்த கூட்டம் வெறும் விளம்பரத்திற்காக நடத்தப்பட்டது. நாங்கள் அங்கு வெறும் தேநீர் அருந்தவும், பங்கேற்கவும் மட்டுமே சென்றோம். பாகிஸ்தானில் ஹோட்டல் அறைக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய வீரர்கள் நின்றபோது கூட நாங்கள் பயப்படாமல் விளையாடினோம். அதைவிடவா இந்தியாவில் ஆபத்து இருக்கப் போகிறது? ஒரு வீரராக எங்களுக்கு விளையாட மட்டுமே விருப்பம் இருந்தது. ஆனால், பாதுகாப்பு என்ற பெயரில் எங்களது கருத்துகள் நிராகரிக்கப்பட்டு, வாரியமே தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்தது” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
