வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி 0-2 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆகி வரலாற்றுத் தோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அணியில் அதிரடி மாற்றங்களைச் செய்யத் தயாராகி வருகிறது. தோல்வியின் எதிரொலியாக டெஸ்ட் கேப்டன் ஷான் மசூத் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் சர்பராஸ் அகமது ஆகியோரின் பதவிகள் பறிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
வங்கதேசத் தொடருக்கு முன்பே பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற சர்பராஸ் அகமதுவை நீக்கிவிட்டு, அவரை மீண்டும் அண்டர்-19 அல்லது பாகிஸ்தான் ‘ஏ’ அணியின் பொறுப்பிற்கு மாற்ற பிசிபி திட்டமிட்டுள்ளது. அவருக்குப் பதிலாக பாகிஸ்தானின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் யூனிஸ் கானைத் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. யூனிஸ் கான் சில நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும், அதில் உடன்பாடு எட்டப்பட்டதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மறுபுறம், கேப்டன் ஷான் மசூத்தின் பதவியும் ஊசலாட்டத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த தொடர் வரை தனக்குக் கால அவகாசம் வழங்குமாறு அவர் கோரியுள்ள போதிலும், பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி உடனடியாகக் கேப்டனை மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். மேலும், முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸை தலைமைத் தேர்வாளராக நியமிக்கவும் பிசிபி பரிசீலித்து வருகிறது. இதற்கிடையில், வீரர்களின் உடற்தகுதி மற்றும் ஆட்டத்திறனை மேம்படுத்த 49 வீரர்களைக் கொண்ட சிறப்புப் பயிற்சி முகாமையும் பிசிபி அறிவித்துள்ளது.
