தமிழக பாஜக கூட்டுறவுப் பிரிவு மாநிலத் தலைவர் மகா சுசீந்திரன், தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பியுள்ள உருக்கமான கடிதத்தில், கடந்த 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் சமீபத்தில் முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல்களில் கட்சி சந்தித்த படுதோல்விகளால் ஏற்பட்ட கடுமையான மனவருத்தமே தனது இந்த முடிவுக்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல்களில் கட்சி தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருவது தொண்டர்கள் மத்தியில் பெரும் தொய்வை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தனது கடிதத்தில் வெளிப்படையாக ஆதங்கப்பட்டுள்ளார்.

​மேலும், கட்சியின் மாநிலத் தலைமையைக் கடுமையாகச் சாடியுள்ள மகா சுசீந்திரன், “பாஜக-வில் இருக்கும் முக்கியத் தலைவர்கள், சாதாரண தொண்டர்கள் செய்யும் அலைபேசி (Phone Calls) அழைப்புகளையாவது எடுத்துப் பேச வேண்டும்; அப்படிச் செய்தால்தான் கட்சியை வளர்க்க முடியும்” என்று மிக அக்மார்க் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தமிழக பாஜக-வில் புதிய மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்ற பின்னரும் உட்கட்சிப் பூசல்களும், தேர்தல் தோல்வி குறித்த குமுறல்களும் பகிரங்கமாக வெடித்து வருவது தற்பொழுது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.