பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் நடத்திய கொடூர துப்பாக்கிச்சூடு மற்றும் அடக்குமுறைகளைக் கண்டித்து, பிரிட்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பாக காஷ்மீர் வம்சாவளியினர் மாபெரும் கண்டனப் போராட்டத்தில் குதித்துள்ளது சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ராவலாகோட் பகுதியில் மான்யம் விலையில் கோதுமை மாவு மற்றும் மின்சாரம் வழங்கக் கோரி ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி (JAAC) சார்பில் கடந்த ஜூன் 5 முதல் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்தப் போராட்டத்தின் போது பாக். ரெய்ஞ்சர்ஸ் படைகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஷாஜைப் ஹபீப் என்ற போராட்டக்காரர் பலியானதைத் தொடர்ந்து வன்முறை வெடித்த நிலையில், பாதுகாப்புப் படையினரின் அத்துமீறிய துப்பாக்கிச் சூட்டிற்குப் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதோடு, 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், பிரிட்டனின் பிராட்போர்டு பகுதியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்ட காஷ்மீர் அமைப்பினர், அப்பாவி மக்கள் மீது பாகிஸ்தான் அரசு ராணுவ பலத்தைப் பயன்படுத்துவதாகவும், அங்கு கடுமையான மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும் குற்றம் சாட்டி ஆக்ரோஷமாக முழக்கமிட்டனர்.

இந்த விவகாரம் பிரிட்டன் அரசியலிலும் எதிரொலித்துள்ள நிலையில், பிஓகே வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி. இம்ரான் உசேன் தலைமையில் சுமார் 50 பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs) அங்கு நடந்து வரும் சட்டவிரோதக் கைதுகள் மற்றும் இணையச் சேவை முடக்கத்தைக் கண்டித்து, பிரிட்டன் அரசு உடனடியாக இதில் ராஜதந்திர ரீதியாகத் தலையிட வேண்டும் எனத் தங்களது கவலையைத் தெரிவித்துள்ளனர்.

லட்சக்கணக்கான மக்கள் வாழும் ஆக்கிரமிப்புப் பகுதியில் பாகிஸ்தான் அரசு நடத்தி வரும் இந்த கொடூர நரவேட்டை மற்றும் லண்டனில் வெடித்துள்ள மாபெரும் போராட்டம், தற்பொழுது நெட்டிசன்கள் மத்தியில் உலகளவில் மிகத் தீவிரமாக விவாதிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் அசுர வேகத்தில் ட்ரெண்டாகி வருகிறது.