புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த முனுசாமி (84) என்ற முதியவர், கடந்த 6 ஆண்டுகளாக எவ்வித ஆதரவும் இன்றி வறுமையோடு போராடி வந்துள்ளார். தனக்குச் சொந்தமான 3 மகன்கள் இருந்தும் தம்மைக் கைவிட்டதால், அவர்களிடம் இருந்து ஜீவனாம்சம் பெற்றுத் தருமாறு காரைக்கால் நீதிமன்றத்தில் அவர் அதிரடியாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 3 மகன்களும் தங்களது வயதான தந்தைக்கு மாதம் தலா ரூ.2000 வீதம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும், தவறினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் ஏற்கனவே எச்சரித்திருந்தது.

​ஆனால், தந்தைக்குப் பணம் கொடுக்க மனமில்லாத அந்த மகன்கள், இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பீல் மேல் அப்பீல் செய்து வழக்கை இழுத்தடித்தனர். இருப்பினும் நீதிமன்றத்தில் மகன்களுக்குத் தோல்வியே மிஞ்சியது. இச்சூழலில், மகன்கள் தனக்குப் பணம் தராமல் ஏமாற்றி வருவதாக முதியவர் மீண்டும் நீதிமன்றத்தை நாடியதைத் தொடர்ந்து, கோபமடைந்த நீதிமன்றம் 3 மகன்களுக்கும் அதிரடியாக 1 மாதம் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

மேலும், முதியவர் கேட்ட ஜீவனாம்சத் தொகையை முழுமையாகக் கொடுக்காவிட்டால் சிறை தண்டனை தொடர்ந்து நீட்டிக்கப்படும் எனவும் நீதிமன்றம் ஆணித்தரமாக எச்சரித்துள்ளது. சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வரும் இந்த தீர்ப்பு, தற்சமயம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.