ஐபிஎல் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியிடம், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அவரது எதிர்காலம் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளியிட்ட வீடியோவில் பேசிய வைபவ், தனது அதிரடி ஆட்டமுறை டெஸ்ட் போட்டிக்குச் செட் ஆகாது என்று பலர் நினைப்பதாகவும், ஆனால் டி20 போட்டியின் தேவைக்கேற்பவே தான் அவ்வாறு விளையாடுவதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

சிவப்பு பந்து கிரிக்கெட்டிற்காகத் தான் தனது மாநில அணிக்காக நிறையப் பயிற்சி பெற்று விளையாடியுள்ளதாகவும், இந்தியாவிற்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதே தனது இறுதி லட்சியம் என்றும் அவர் கவாஸ்கரிடம் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்காக விளையாடுவது மட்டுமே தனது குறிக்கோள் அல்ல என்றும், எந்த அணியில் விளையாடினாலும் வெற்றியைத் தேடித்தரும் ஆட்டத்தை வெளிப்படுத்துவதே முக்கியம் என்றும் வைபவ் கூறியுள்ளார்.

அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளுக்குத் தான் விளையாடும் போட்டிகளில் ஒற்றை ஆளாக நின்று போட்டியை முடித்து வைக்கும் அளவிற்குத் தனது ஆதிக்கத்தைச் செலுத்த வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சும்மா விளையாடினோம் என்று இல்லாமல், கிரிக்கெட் உலகையே ஆதிக்கம் செலுத்தி, விளையாட்டை முழுமையாக ரசித்து ஆட வேண்டும் என்பதற்காகவே தான் தற்போது மிகக் கடுமையாக உழைத்து வருவதாக இந்த இளம் திறமையாளர் மிகுந்த நம்பிக்கையுடன் பகிர்ந்துள்ளார்