கடந்த 1996-ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான வீரப்பன் நேர்காணல் விவகாரத்தில், நடிகை சுகன்யாவுக்கு ரூ.10.01 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கீழ்நீதிமன்றத் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அந்த நேர்காணலில் வீரப்பன் முன்வைத்த அவதூறான கருத்துக்களால் தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் சினிமா வாய்ப்புகள் பாதிக்கப்பட்டதாகவும் சுகன்யா தொடர்ந்த வழக்கில், சன் டிவிக்கு அதைத் திருத்துவதற்கும் நீக்குவதற்கும் முழு அதிகாரம் இருந்தும், உரிய பொறுப்பின்றிச் செயல்பட்டதாக நீதிபதி கே.குமரேஷ் பாபு தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஒளிபரப்புவதற்கு முன்பாக அந்த நேர்காணலின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்கவோ அல்லது சுகன்யாவிடம் விளக்கம் பெறவோ சன் டிவி எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பொது மன்னிப்பைத் தனது சொந்த சேனலில் ஒளிபரப்பாமல், குறைந்த வாசகர்களைக் கொண்ட பத்திரிகையில் மட்டும் வெளியிட்டது சன் டிவியின் உள்நோக்கத்தையே காட்டுகிறது என்று கூறிய நீதிமன்றம், சிவில் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து சன் டிவியின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.
