இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், நாடு முழுவதும் உள்ள உணவகங்கள் மற்றும் தெருவோரக் கடை வியாபாரிகள் உணவுகளை பேக் செய்யவோ அல்லது பரிமாறவோ செய்தித்தாள்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சமீபத்தில் மும்பையில் வடாபாவ் வியாபாரி ஒருவர் செய்தித்தாளில் உணவுப் பொருட்களை மடித்துக் கொடுத்ததை அடுத்து, FSSAI மற்றும் மும்பை மாநகராட்சி இணைந்து இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளன.

செய்தித்தாள்களில் பயன்படுத்தப்படும் அச்சு மை (Printing Ink), ஈயம் (Lead) போன்ற ஆபத்தான ரசாயனங்கள் மற்றும் கன உலோகங்களைக் கொண்டுள்ளதால், சூடான அல்லது எண்ணெய் பலகாரங்கள் அதன் மேல் படும்போது அந்த நச்சுகள் உணவோடு கலந்து உடலுக்குள் சென்று கடுமையான நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் என்று FSSAI எச்சரித்துள்ளது.

மேலும், செய்தித்தாள்கள் கைமாறி வரும்போது அவற்றில் பல்வேறு கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் பரவ வாய்ப்புள்ளதால், அவை உணவு மூலம் பரவும் கொடிய நோய்களை உருவாக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டின் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, உணவுகளைச் சேமிக்கவோ அல்லது பரிமாறவோ செய்தித்தாள்களைப் பயன்படுத்துவது முற்றிலும் சட்டவிரோதமானது. தெருவோரக் கடைகள் முதல் பெரிய உணவகங்கள் மற்றும் ஆன்லைன் கிச்சன்கள் வரை அனைத்தும் தரமான பேக்கிங் மெட்டீரியல்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் கூட, துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலில் அசுத்தமான முறையில் பாத்திரங்கள் கையாளப்பட்ட வீடியோ வைரலானதை அடுத்து, ஐஆர்சிடிசி நிறுவனத்திற்கு FSSAI நோட்டீஸ் அனுப்பி அதிரடி காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இனி பொதுமக்கள் செய்தித்தாள்களில் மடித்துத் தரப்படும் உணவுகளை வாங்கி உண்ண வேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.