தெலுங்கானா மாநிலம் மபுக்கியா தண்டா கிராமத்தில் நெஞ்சை உலுக்கும் மர்ம மரணச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த சாரதா (40) என்ற பெண், தனது மகனுடன் உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்குத் திரும்பி வரும் வழியில், சூர்யாபேட்டையில் உள்ள ஒரு அரசு உரிமம் பெற்ற மதுபானக் கடையில் மது பாட்டில்களை வாங்கியுள்ளார்.
வீட்டிற்கு வந்த சாரதா, இரவு நேரத்தில் தனது நெருங்கிய தோழியான நீலா (42) என்பவரை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். இருவரும் ஒன்றாக அமர்ந்து, கதைகள் பேசிக்கொண்டே மகிழ்ச்சியாக மது அருந்தியுள்ளனர். ஆனால், மதுவைக் குடித்த அடுத்த சில நிமிடங்களிலேயே இருவருக்கும் கடுமையான வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டுள்ளது. எதிர்பாராதவிதமாக இருவரும் தரையில் சுருண்டு விழுந்து அசைவற்று கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்,
உடனடியாக அவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீஸார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பெண்கள் குடித்த மதுவில் யாராவது திட்டமிட்டு விஷம் கலந்தார்களா அல்லது அது உயிரைப் பறிக்கும் போலி கள்ளச்சாராயமா என்ற கோணத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
