திருமண விழாக்களில் அட்சதை தூவி வாழ்த்துவதற்குக் உதிரி  பூக்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும், அட்சதை என்ற பெயரில் அரிசியை வீணாக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநில செயலாளர் சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது,
இன்றைய சூழலில் நூற்றுக்கு 99 திருமணங்களில் மணமக்களை வாழ்த்துவதற்காக அவர்கள் மீது அரிசியை வீசி வாழ்த்து தெரிவிக்கும் வழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. இதனால் பெருமளவிலான உணவுப் பொருள் வீணாக்கப்படுகிறது.

கணக்கீட்டுப் படிப் பார்த்தால், ஒரு திருமண விழாவிற்குச் சராசரியாக 2 கிலோ அரிசியைப் பயன்படுத்தினால் கூட, ஒரு லட்சம் திருமணங்கள் நடைபெறும் போது சுமார் 2 லட்சம் கிலோ அரிசி வீணாகிறது. அவ்வாறு தூவப்படும் அரிசியும் முழுமையாக மணமக்கள் மீது விழுவதில்லை; அது அங்கிருப்பவர்களின் தலையில்தான் போய் விழுகிறது.

ஏழை எளிய மக்களின் பிரதான உணவுப் பொருளான அரிசி இவ்வாறு வீணாக்கப்படுவது முறையல்ல. எனவே, பொதுமக்கள் இனி தங்கள் வீட்டு விசேஷங்கள் மற்றும் திருமண விழாக்களுக்கு அரிசியை வீணாக்காமல், அதற்கு மாற்றாக உதிரிப் பூக்களைப்  பயன்படுத்தி மணமக்களை வாழ்த்த முன்வர வேண்டும்,” என்று அவர் பேசினார். மேலும் உணவுப் பொருள் விரயமாவதைத் தடுக்கும் நோக்கில் சிபிஎம் மாநில செயலாளர் பேசிய இந்த அறிவுரை சமூக வலைத்தளங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.