ரஷிய அதிபர் புதின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உலகளாவிய முக்கிய செய்தி நிறுவனங்களின் தலைவர்களுடன் நடத்திய விரிவான கலந்துரையாடலில், இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு உலகளாவிய விவகாரங்கள் குறித்துப் பேசியுள்ளார்.

கடந்த 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு இரு நாடுகளும் உறவை மேம்படுத்த முயன்று வரும் சூழலில், இந்தியா-சீனா இடையிலான சிக்கலான இருதரப்பு உறவுகளில் ரஷியா தலையிடாது என்று புதின் உறுதியாகத் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகிய இருவரையும் பாராட்டிய அவர், இரு தலைவர்களும் எல்லைப் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்ப்பதில் உறுதியாக உள்ளதாகக் குறிப்பிட்டதுடன், சீனா உடனான ரஷியாவின் கூட்டணி இந்தியாவுடனான பிணைப்பை ஒருபோதும் பாதிக்காது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அதிபர் புதின், பாகிஸ்தான் சீனாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தான் நம்பவில்லை என்றும், அது பல்வேறு நாடுகளுடன் பலதரப்பட்ட உறவுகளைக் கொண்டுள்ள பெரிய நாடு என்றும் குறிப்பிட்டார். மேலும், இந்தியா உடனான பாதுகாப்பு மற்றும் ராணுவ உறவுகள் குறித்துப் பேசுகையில், ஐந்தாம் தலைமுறை எஸ்.யு.-57 (SU-57) போர் விமானத்தைக் கூட்டாகத் தயாரிப்பதற்கு இந்தியாவிடம் ரஷியா பரிந்துரைத்துள்ளதாக அதிரடியாக அறிவித்தார்.

இத்துறையில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த புதின், முக்கிய பாதுகாப்புத் தளங்கள் மற்றும் ஆயுதங்களுக்கான அதிநவீன தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு வழங்க ரஷியா தயாராக உள்ளதாகவும் கூறி சர்வதேச பாதுகாப்பு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.