பெங்களூரு எச்.ஏ.எல் டவுன்ஷிப் அருகே உள்ள விஞ்ஞான் நகரில் வசித்து வந்த ஓய்வு பெற்ற கடற்படை கேப்டன் நவீன் சந்திரபட் (60) மற்றும் அவரது மனைவியும் பல் மருத்துவருமான சியாமளா பட் (55) ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டனர். இவர்களைக் கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ், அமெரிக்காவில் மென்பொறியாளராகப் பணியாற்றிவிட்டு 3 ஆண்டுகளுக்கு முன்பு ஊர் திரும்பிய இவர்களது மகன் ரோகன் சந்திரபட் (33) என்பவரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் போலீஸார் தற்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 500 பக்க குற்றப்பத்திரிகையில், கொலையின் பின்னணி குறித்த அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விசாரணையில், ரோகன் பெங்களூருவில் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்குவதற்காகத் தனது தந்தையிடம் ரூ.10 லட்சம் பணம் கேட்டுள்ளார். ஆனால், தந்தை அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டு, உள்ளூரிலேயே ஏதாவது வேலை தேடிக்கொள்ளுமாறு கறாராகக் கூறியுள்ளார். இந்த ஆத்திரத்தில் இருந்த ரோகன், தான் பயன்படுத்தி வந்த ஜியோ சிம் கார்டை ஏர்டெல் நிறுவனத்திற்கு மாற்ற  முயன்றபோது, அதற்குத் தந்தை கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் உச்சகட்டமாக, பிப்ரவரி 11 அன்று ரோகன் தனது பெற்றோரைக் கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்துள்ளார். மேலும் தனக்கு மனச்சிதைவு நோய் இருப்பதாகக் கூறி தப்பிக்க முயன்ற ரோகனின் நாடகத்தை மருத்துவர்கள் முறியடித்ததைத் தொடர்ந்து, 40-க்கும் மேற்பட்ட சாட்சியங்களுடன் போலீஸார் அவர் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.