மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரின் ராதாநகரி பகுதியில் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கும் வகையிலான அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இங்குள்ள கல்லூரி மாணவி ஒருவரை, அவரது காதலன் உட்பட நான்கு பேர் கொண்ட கும்பல் கடந்த 10 மாதங்களாகப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஆதித்யா ஷெட்கே, பவன்கிரி பால்கர், விக்ரம் பாட்டீல், ரஞ்சித் முதோல்கர் ஆகிய நான்கு பேரை  முர்குட் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இவர்களில் முதன்மை குற்றவாளியான ஆதித்யா ஷெட்கே ராதாநகரி பகுதியில் புகைப்படம் எடுக்கும்  தொழில் செய்து வந்துள்ளார். அந்த வகையில் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

காதலைத் தவறாகப் பயன்படுத்திய ஆதித்யா, அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக இருந்தபோது ரகசியமாக ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளார். பின்னர், அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, தனது நண்பர்களுடனும் பழகுமாறு அந்தப் பெண்ணைக் கட்டாயப்படுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த நான்கு பேரும் சேர்ந்து கடந்த 10 மாதங்களாகப் பெண்ணை வெவ்வேறு இடங்களுக்குக் கடத்திச் சென்று, வீடியோக்களைக் காட்டி மிரட்டித் தொடர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த கொடூரத்தை சகித்துக்கொள்ள முடியாத அந்தப் பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளது.