ரயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் சமயங்களில் பயணிகள் தங்களுக்குக் கிடைக்கும் சிறிய இடத்திலாவது அமர்ந்து பயணிக்க முயல்வது வழக்கம். ஆனால், குடிபோதையில் ரயிலில் ஏறிய நபர் ஒருவர், கூட்டம் அதிகமாக இருந்ததால் தனக்கு சீட் கிடைக்காத விரக்தியில் செய்த காரியம் ஒட்டுமொத்த சோசியல் மீடியாவையும் அதிரவைத்துள்ளது. எக்ஸ் (X) தளத்தில் ‘அஸ்வினி சோனி’ என்ற பயனர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், ரயில் பெட்டி முழுக்க பயணிகள் கூட்டமாக நின்று கொண்டிருக்கின்றனர். நிற்கக்கூட இடமில்லாததால் பல பயணிகள் கழிவறைக்கு  அருகிலேயே குவிந்து நிற்கின்றனர். அப்போது அங்கிருந்தவர்களின் பார்வை கழிவறைக்குள் செல்ல, அங்கு கண்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சியிலும் சிரிப்பிலும் ஆழ்த்தியது.

 

அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்த அந்த நபர், சுயநினைவே இல்லாமல் ரயிலின் கழிவறை இருக்கை (Toilet Seat) மீதே படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார். தான் எங்கு இருக்கிறோம், எப்படித் தூங்குகிறோம் என்ற எந்தவொரு கவலையும் இல்லாமல் கழிவறையையே தனது சொகுசு படுக்கையாக அவர் மாற்றியுள்ளார். இணையத்தில் வேகமாகப் பரவி வரும் இந்த வீடியோவை இதுவரை ஆயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர். இதைப் பார்த்த நெட்டிசன்கள், “ஏதோ லக்சுரி ஹோட்டல் பெட்ல தூங்குற மாதிரி எவ்வளவு அமைதியா தூங்குறாரு பாருங்க!” என்றும், “இது போதையின் அடுத்த லெவல்!” என்றும்  இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் மரண ட்ரெண்டாக்கி வருகின்றனர்.