வேலை தேடும் இளைஞர்களின் தற்போதைய அவல நிலையையும், சில நிறுவனங்களின் அலட்சியப்போக்கையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் விதமாக ரெடிட் சமூக வலைதளத்தில் டெல்லி இளைஞர் ஒருவர் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. நேர்காணலுக்காக டெல்லியிலிருந்து ஹைதராபாத்திற்கு ₹14,000 செலவு செய்து விமானத்தில் சென்ற தனக்கு, வெறும் 10 நிமிடங்களில் வேலை இல்லை என்று கூறி நிராகரித்ததாக அந்த இளைஞர் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
நிறுவனத்தின் இந்த செயலால் தான் ஏமாற்றப்பட்டதாகவும், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது சுயவிவரக் குறிப்பை முழுமையாகப் பார்த்துவிட்டு, தகுதி உள்ளதால் மட்டுமே நேர்காணலுக்கு அழைத்திருப்பார்கள் என்று நம்பி, தங்கியிருந்த நிறுவனத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு பல நாட்கள் தயாரிப்புடன் அவர் ஹைதராபாத் சென்றுள்ளார்.
ஆனால், நேர்காணல் நடந்த இடத்திற்குச் சென்றபோதே அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அங்கு வந்திருந்த அதிகாரிகளும் ஹெச்.ஆர் ஊழியர்களும் தெலுங்கு மொழியிலேயே அதிகம் உரையாடியதுடன், உள்ளூர் மற்றும் தெலுங்கு பேசும் விண்ணப்பதாரர்களுக்கே முன்னுரிமை கொடுத்து முதலில் நேர்காணலுக்கு அழைத்ததாக அந்த இளைஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
மற்றவர்களுக்கு 20 முதல் 30 நிமிடங்கள் வரை நேர்காணல் நடந்த நிலையில், இவருக்கு மட்டும் வெறும் 10 நிமிடங்களில் நேர்காணலை முடித்துவிட்டு ‘நோ’ சொல்லியுள்ளனர். இந்த பதிவு வைரலானதைத் தொடர்ந்து, வெளிமாநிலங்களில் இருந்து நேர்காணலுக்கு ஆட்களை நேரில் அழைக்கும் நிறுவனங்கள், அவர்களின் பயணச் செலவை ஏற்க வேண்டும் அல்லது அதுகுறித்த கொள்கைகளை முன்கூட்டியே தெளிவுபடுத்த வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆதங்கங்களை கமெண்ட்டுகளில் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.
