ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, ஒட்டுமொத்த உலகமும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகிறது. இந்த விலை உயர்வு, போரால் பாதிக்கப்பட்டு காசா பகுதியில் தவிக்கும் ஏழை மக்களின் உணவுத் தேவையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள அகதிகளுக்கு கடந்த 2010ஆம் ஆண்டு முதல் தினசரி சுடச்சுட சத்தான உணவுகளை வழங்கி வந்த ‘வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்’ (World Central Kitchen) என்ற சர்வதேச மனிதநேய அமைப்பு, தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடி மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக, தங்களின் உணவு விநியோகத்தை பாதியாகக் குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்க-ஸ்பானிஷ் சமையல் கலைஞர் ஜோஸ் ஆண்ட்ரெஸ் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, காசாவில் போர் தொடங்கியதில் இருந்து தினமும் சுமார் ஒரு கோடி மக்களுக்கு சமைத்த உணவுப் பொட்டலங்களை வழங்கி வந்தது. ஆனால், தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக வேறு வழியின்றி இந்த எண்ணிக்கையை 50 லட்சமாகக் குறைக்க உள்ளதாக அந்த அமைப்பு வேதனையுடன் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஒருபுறம் குண்டுவெடிப்பு மற்றும் ராணுவத் தாக்குதல்களுக்கு பயந்து வாழ்ந்து வரும் காசா மக்கள், இந்த அறிவிப்பால் தங்களுக்குப் பட்டினிச் சாவு ஏற்பட்டு விடுமோ என்ற பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.