தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு முழுமையாகக் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், குற்றச் சம்பவங்கள் மீது உடனுக்குடன் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல்வேறு முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது,
“தமிழக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின் மூலம் சுமார் 80 சதவீதத்திற்கும் அதிகமான விவசாயிகள் நேரடியாகப் பலன் பெற்றுள்ளனர். விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்காக முதலமைச்சர் விஜய் நாள்தோறும் அயராது பாடுபட்டு வருகிறார். பயிர்க்கடன் தொடர்பான அரசாணை மிக விரைவில் வெளியிடப்படும். மேலும், இதுகுறித்த வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பணியும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திமுகவின் தூண்டுதலின் பெயரிலேயே ஒரு சில இடங்களில் பயிர்க்கடன் தொடர்பாகத் திட்டமிட்டுப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், முதலமைச்சர் விஜய் அவர்கள் எப்போதுமே மக்கள் பக்கமே இருப்பவர், அவர் அடிக்கடி மக்களை நேரடியாகச் சந்திப்பார்.
கடந்த கால அரசியல் நிகழ்வுகள் குறித்துப் பேசிய அமைச்சர், “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திப்பதற்காக அப்போது நேரம் கேட்கப்பட்டது உண்மைதான். ஆனால், சில தனிப்பட்ட காரணங்களால் சந்திக்க வேண்டாம் என்று இபிஎஸ் கூறிவிட்டார். அதேபோல், அப்போதைய அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஒரு சிலர் இந்தச் சந்திப்பு சரியாக இருக்காது என்றும் அறிவுறுத்தினர் என்றார்.
தொடர்ந்து எதிர்க்கட்சிகளைக் கடுமையாக விமர்சித்த அவர், “அதிமுக என்ற பேரியக்கத்தை முழுமையாகக் காலி செய்தது எடப்பாடி பழனிசாமி தான். ஒரு கட்டத்தில் திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்கக்கூடப் பின்னணியில் முயற்சிகளை மேற்கொண்டன. தற்போதைய சூழலில், திமுகவுக்கு எதிராகத் துணிச்சலுடன் நேருக்கு நேர் நிற்கக்கூடிய ஒரே சக்தி தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மட்டும்தான்” என்று குறிப்பிட்டார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், “டிடிவி தினகரன் தற்போதைய அரசியல் சூழலில் தன்னைத்தானே சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அவர் அரசியலை விட்டு முழுமையாக ஒதுங்கிக்கொள்வதுதான் அவருக்கும் நல்லது என்று காரசாரமாகப் பதிலளித்தார்.
