மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட ஐஸ் கட்டிகள் மீது தெருநாய்கள் ஏறி நின்று, அவற்றை நாக்கால் நக்கும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகி பொதுமக்களிடையே கடும் வாந்தியை வரவழைத்துள்ளது. பைராசியா சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே, திறந்தவெளியில் இந்த ஐஸ் கட்டிகள் வைக்கப்பட்டிருந்த போது, கடுமையான வெயில் காரணமாக இரண்டு மூன்று நாய்கள் அதன் மீது ஏறி நின்று ஜிலுஜிலுவென ஐஸை நக்கியபடி உலா வந்துள்ளன. இந்த அருவருப்பான காட்சி அங்கிருந்தவர்களின் மொபைல் கேமராவில் சிக்கியதால் பெரும் பரபரப்பு வெடித்தது.
#WATCH | Dogs Seen Licking Huge Ice Bars Kept For Sale On Berasia Road In Bhopal; Incident Caught On Camera #MPnews #MadhyaPradesh #foodsafety pic.twitter.com/6Lp4ZXYObW
— Free Press Madhya Pradesh (@FreePressMP) June 2, 2026
இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சுகாதாரமற்ற முறையில் ஐஸ் கட்டிகளை விற்ற கடைக்காரருக்கு 2,000 ரூபாய் அபராதம் விதித்ததோடு, நாய்கள் நக்கிய அனைத்து ஐஸ் கட்டிகளையும் பறிமுதல் செய்து, அங்கிருந்த சாக்கடையில் வீசி அழித்தனர். இந்த ஐஸ் கட்டிகள் தான் அப்பகுதியில் உள்ள ஜூஸ் கடைகளுக்கும், கரும்புச்சாறு ஸ்டால்களுக்கும் தினமும் சப்ளை செய்யப்படுவதாக உள்ளூர் மக்கள் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நிலையில், பொதுமக்கள் வெளியில் ஜூஸ் குடிக்கும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
