தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூத்த சகோதரரான வாசுதேவன் (வயது 92), கர்நாடக மாநிலம் மைசூரில் இன்று அதிகாலை வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார்.

மறைந்த ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமின் முதல் மனைவிக்கு மகனாகப் பிறந்த வாசுதேவன், கடந்த சில நாட்களாக மைசூரில் உள்ள தனது வளர்ப்பு மகள் பவித்ராவின் இல்லத்தில் தங்கி மருத்துவச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.

12 வயதிலேயே தனது மகனை இழந்த வாசுதேவன், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியையும் இழந்த நிலையில், தனது வளர்ப்பு மகள் மற்றும் பேரன், பேத்திகளுடன் வசித்து வந்தார்.

ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவரை நேரில் சந்திப்பதற்காக இரண்டு முறை ஊட்டிக்குச் சென்றிருந்த போதிலும், தனது தங்கையை நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்பு இறுதிவரை வாசுதேவனுக்குக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை ரங்கராஜபுராவில் அவரது இறுதிச்சடங்குகள் நல்லபடியாக நடந்து முடிந்த நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மறைந்த செய்தி அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் தற்பொழுது விவாதப் பொருளாக மாறியுள்ளது.