அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பிரச்னைகள் மற்றும் தேர்தல் தோல்வியால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட தஞ்சையை  சேர்ந்த அதிமுக நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். முன்னதாக, தான் மறைந்த பிறகாவது அதிமுகவினர் அனைவரும் ஒன்றுபட்டு நின்று அடுத்த தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் எனவும், தனது இறுதி நிகழ்வில் பொதுச்செயலாளர் கலந்து கொண்டால் மட்டுமே தனது ஆத்மா சாந்தியடையும் எனவும் மகேந்திரன் இறப்பதற்கு முன் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

தொண்டரின் இந்த இறுதி விருப்பத்தை ஏற்று நேரில் வந்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்த மகேந்திரனின் குழந்தையின் படிப்புச் செலவு முழுவதையும் கட்சியே ஏற்கும் என்றும், அவரது குடும்பத்தினருக்கு கட்சி சார்பில் ₹55 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் கண்ணீருடன் அறிவித்தார்.

மேலும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் இது போன்ற விபரீத முடிவுகளை இனி எடுக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதனிடையே, இந்தத் துயரச் சம்பவத்தைக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ராஜ் சத்யன், சுயநல அரசியலால் தொண்டர்களை இனியும் மன வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்றும், அதிமுகவின் எதிர்கால நலன் கருதி மூத்த தலைவர்கள் பிடிவாதங்களைத் தளர்த்தி இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.