சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை இன்று அதிரடியாக ரூ.46 உயர்த்தப்பட்டு, ரூ.3,283-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களைத் தொடர்ந்து தற்போது ஜூன் 1-ஆம் தேதியும் விலை உயர்ந்துள்ளதால், வணிகர்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த நான்கு மாதங்களில் மட்டும் மொத்தம் 4 முறை வணிக சிலிண்டரின் விலை எகிறியுள்ளது சிறு வியாபாரிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளையில், பொதுமக்களுக்கும் இல்லத்தரசிகளுக்கும் நிம்மதி தரும் விதமாக, வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் வழக்கம் போல் வீட்டு சிலிண்டர் விலை ரூ.928.50 ஆகவே நீடிக்கிறது. வணிக சிலிண்டர் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பதால், வரும் நாட்களில் உணவகங்களில் சாப்பாட்டு விலை உயருமா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
