கேரள மாநிலம் நெடுமங்காடு பகுதியில், ஒன்றரை வயதுக் குழந்தை அர்ஷத் என்பவன் அவனது மாற்றாந்தாய் தந்தை அஷ்கர் என்பவனால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் காவலில் உள்ள அஷ்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தைக்குச் சாப்பாடு ஊட்டும்போது அவன் அழுதுகொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்து அடித்ததாக அவன் ஒப்புக்கொண்டுள்ளான்.

இந்த நிலையில், குற்றவாளி அஷ்கரின் முதல் மனைவியான அமீனாவின் குடும்பத்தினர், அவன் மீது அடுக்கடுக்கான கொடூரப் புகார்களை முன்வைத்துள்ளனர். காதலித்துத் திருமணம் செய்துகொண்ட சில மாதங்களிலேயே அமீனாவை வரதட்சணை கேட்டு அஷ்கர், அவனது தாய் மற்றும் சகோதரி ஆகியோர் சேர்ந்து மிகக் கொடூரமாக சித்திரவதை செய்ததாக அமீனாவின் தாய் ஷாஜிலா பீவி தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் குற்றம் சாட்டியுள்ளார்.

அஷ்கர் தனது மகள் அமீனாவின் தலையை சுவரில் மோதிக் கொடூரமாகத் தாக்கியதில் அவளது மண்டை ஓடு உடைந்து, கடந்த ஓராண்டாக கோமா நிலையில் இருந்து அண்மையில்தான் அவர் நினைவு திரும்பியுள்ளார் என்றும், தற்போது அவர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மறுவாழ்வு சிகிச்சை பெற்று வருவதாகவும் ஷாஜிலா தெரிவித்துள்ளார்.

இந்த சித்திரவதைகள் குறித்து காவல் நிலையத்தில் ஆறு முறை புகார் அளித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், போலீசாரின் இந்த அலட்சியமே இன்று ஒரு பிஞ்சு உயிரைப் பறிக்கும் அளவிற்கு அஷ்கரைத் துணிய வைத்துள்ளது என்றும் அவர் சாடியுள்ளார். இதுமட்டுமன்றி, தனது இளைய மகன் ஆற்றில் மூழ்கி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்திலும் அஷ்கருக்குத் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கும் அமீனாவின் குடும்பத்தினர், முதல் மனைவியைப் பிரிந்து முறையாக விவாகரத்து பெறாமலேயே அகிலா என்ற பெண்ணுடன் அஷ்கர் குடும்பம் நடத்தி வந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்து கேரளா போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.