உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான என்விடியா-வின் (Nvidia) தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஜென்சன் ஹுவாங், தைவானின் தைபே நகரில் நடைபெற்ற ஊழியர்கள் கொண்டாட்ட நிகழ்வு ஒன்றில் மேடையில் இறங்கி நடனமாடிய வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவி உலகளவில் வைரலாகி வருகிறது. தைவானில் பிறந்தவரான ஜென்சன் ஹுவாங், அந்நகரத்தில் நடைபெற்ற நிறுவனத்தின் “கான்ஸ்டலேஷன் அனைத்து ஊழியர்கள் கொண்டாட்ட” விழாவில் தனது சக ஊழியர்களுடன் இணைந்து மிகவும் உற்சாகமாக நடனமாடினார்.
செயற்கை நுண்ணறிவு (AI), கணினி சிப்கள் மற்றும் தொழில்நுட்ப உத்திகள் குறித்து எப்போதும் தீவிரமாகப் பேசும் ஒரு கார்ப்பரேட் தலைவரை, முற்றிலும் மாறுபட்ட ஒரு கலகலப்பான சூழலில் கண்ட நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பாராட்டித் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
没想到黄仁勋还有这么可爱的一面,竟然还嘟着嘴跳舞。
这舞跳的松弛又自然,感觉他可以和特朗普斗舞了。 pic.twitter.com/BHk9s4Luvd
— 空空丨火币赚币 (@btcoindown) May 30, 2026
3 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புடைய ஒரு பிரம்மாண்ட தொழில்நுட்பப் பேரரசை வழிநடத்தும் ஜென்சன் ஹுவாங், இரவு நேரத்தில் ஊழியர்களுடன் ஒருவராக மாறி நடனமாடிய விதம் தங்களுக்குள் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளதாக நெட்டிசன்கள் பலரும் சிலாகித்து வருகின்றனர். இதுமட்டுமன்றி, கடந்த சில நாட்களுக்கு முன்பு தைபேயின் புகழ்பெற்ற இரவுச் சந்தையான ராவ்ஹே உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்ற ஜென்சன் ஹுவாங், அங்கு நீண்ட வரிசையில் நின்றிருந்த மக்களுக்கு தானே சுட்ட சோளத்திற்கான பணத்தைச் செலுத்துவதாகக் கூறி, நகைச்சுவையாகப் பேசி வரிசையின் முன்னே சென்ற வீடியோவும் இணையத்தில் வைரலானது.
அங்குள்ள உள்ளூர் உணவுகளை ருசித்துப் பார்த்தபடியும், தன்னைச் சூழ்ந்த ரசிகர்களுடன் எளிமையாகப் புகைப்படம் எடுத்தபடியும் அவர் வலம் வந்த காட்சிகள், கார்ப்பரேட் தலைவர்கள் என்பவர்கள் வெறும் செய்திகளிலும் லாப அறிக்கைகளிலும் மட்டுமே வாழ்பவர்கள் அல்ல, அவர்களும் தங்களது குழுவினருடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடும் சாதாரண மனிதர்களே என்பதை உணர்த்துவதாக மக்கள் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.
