இந்திய ஏர்போர்ட்டுகளில் லக்கேஜ் பெல்ட் (Baggage Carousel) அருகில் பயணிகள் கூட்டம் கூட்டமாக முண்டியடித்துக் கொண்டு, மற்றவர்களுக்கு வழிவிடாமல் அநாகரிகமாக நடந்துகொள்வது குறித்து மங்களம் பொடார் என்ற இந்திய டிராவலர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் மிகப்பெரிய விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.
லக்கேஜ் பெல்ட் நகரத் தொடங்கியதுமே பயணிகள் அனைவரும் பெல்ட்டின் ஆரம்பப் பகுதியிலேயே குவிந்து, ஒருவரையொருவர் இடித்துக்கொண்டு நிற்பதை வீடியோவில் காட்டிய அவர், “நமக்கு ஏன் இவ்வளவு பைத்தியக்காரத்தனம்? பெல்ட் நகர்ந்து அடுத்த பக்கம் தான் வரப்போகிறது, அந்தப் பக்கம் முற்றிலும் காலியாக இருக்கிறது; ஆனால் எல்லாரும் வியர்க்க விறுவிறுக்க இங்கேயே முட்டிக்கொள்கிறார்கள். நம்ம இந்தியர்களுக்கு என்னதான் ஆச்சு?” எனத் தனது ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார்.
இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பயணிகளின் ஆதரவைப் பெற்று வைரலாகி வருகிறது. இதற்குப் பின்னூட்டம் இட்டுள்ள நெட்டிசன்கள், “இந்திய சமூகம் என்பது ஒருவரையொருவர் நம்பாத ‘லோ-ட்ரஸ்ட்’ (Low-trust) சமூகமாக மாறிவிட்டது; பிளேன் லேண்ட் ஆன உடனே எழுந்து நிற்பதும், நம் லக்கேஜை யாராவது எடுத்துட்டு போயிருவாங்களோ என்று பயந்து பெல்ட் முன்னாடி முந்துவதும் இதனால்தான்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சிலர், “இது ஏர்போர்ட்டில் மட்டுமல்ல, டிராஃபிக் சிக்னலில் ஜீப்ரா கிராசிங்கைத் தாண்டி டூ-வீலர்களை நிறுத்துவதிலும் இதே தேவையில்லாத அர்ஜென்சி மற்றும் போட்டி மனப்பான்மைதான் வெளிப்படுகிறது” என இந்தியர்களின் பொதுப்புத்தியைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
