திருவாரூர் மாவட்டம், குடவாசல் அடுத்த சேங்காலிபுரத்தைச் சேர்ந்த செங்கல் வியாபாரி திருமுகம் (50) என்பவர், நேற்று முன்தினம் அதிகாலை தனது மனைவி மற்றும் குழந்தைகள் கண் முன்னே மர்மக் கும்பலால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனைத் தடுத்த அவரது மனைவி சுதாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இக்கொலை தொடர்பாக திருவாரூர் டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையிலான தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, குடவாசல் வடகண்டம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜா (38) என்பவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட திருமுகமும், கைதான வழக்கறிஞர் ராஜாவும் பெரியப்பா, சித்தப்பா மகன்கள் என்பது தெரியவந்தது.
மேலும், வழக்கறிஞருக்கும் அவரது அண்ணி முறை உறவினருக்கும் இருந்த கள்ளத்தொடர்பை திருமுகம் கண்டித்துப் பிரித்ததால், ஆத்திரமடைந்த ராஜா தனது நண்பர்களுடன் சேர்ந்து இக்கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகப் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளியான வழக்கறிஞர் ராஜாவுடன் சேர்ந்து கொலையில் ஈடுபட்ட கண்மணி (33), மணிகண்டன் (35), தீபன் (30), கண்ணன் (40) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 5 பேரையும் போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.
கொலை செய்யச் சென்றவர்களில் வழக்கறிஞரைத் தவிர மற்ற 5 பேரும் போது கடுமையான மதுபோதையில் இருந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கைதானவர்களில் 17 வயது சிறுவன் தஞ்சை கூர்நோக்கு இல்லத்திலும், வழக்கறிஞர் ராஜா உள்ளிட்ட மற்ற 5 பேரும் நீதிமன்ற உத்தரவின்படி திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
முன்னதாக, கொலையாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி திருமுகத்தின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் புதுக்குடியில் நடத்திய திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
