அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் அரசியல் பதற்றம் காரணமாக, பாகிஸ்தானில் புதிய பணவீக்க நெருக்கடி ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதன் எதிரொலியாக எரிபொருள் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் போன்றவற்றால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடும் பொருளாதார சுமையை எதிர்கொண்டு வருவதாகத் தலைநகர் இஸ்லாமாபாத் வாசிகள் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் இந்த மோதல் போக்கு, பாகிஸ்தானின் அன்றாட வாழ்க்கையை ஏற்கனவே பாதிக்கத் தொடங்கிவிட்டதாக அந்நாட்டு மக்கள் கூறுகின்றனர். சம்பள உயர்வு இல்லாத நிலையில், பணவீக்கம் தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளதால் மாதச் சம்பளம் வாங்குபவர்களும், குறைந்த வருவாய் பிரிவினரும் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.

இதுகுறித்து இஸ்லாமாபாத் வாசி ஒருவர் கூறுகையில், “எரிபொருள் விலையை சமாளிக்க முடியாமல் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக எனது காரை வீட்டிலேயே நிறுத்தி வைத்துள்ளேன். தற்போது இருசக்கர வாகனத்தை பராமரிப்பது கூட பெரும் சுமையாக மாறிவிட்டது. சம்பளம் அப்படியே உள்ளது; ஆனால் விலைவாசி மட்டும் விண்ணைத் தொடுகிறது. இங்கு வாழ்க்கை நடத்துவதே சாத்தியமில்லாத ஒன்றாக மாறிவருகிறது,” என்று வேதனை தெரிவித்தார்.

அமெரிக்கா – ஈரான் மோதல் மற்றும் உலக அளவில் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ‘ஹார்முஸ் ஜலசந்தி’ பகுதியில் நிலவும் பதற்ற சூழல் காரணமாகவே உலகளாவிய எரிசக்தி சந்தையில் பாதிப்பு ஏற்பட்டு, பாகிஸ்தானில் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்படுகிறது.

பொதுமக்களின் கூற்றுப்படி, பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சுமார் ரூ. 250-லிருந்து அதிரடியாக உயர்ந்து ரூ. 450 வரை சென்றது. தற்போது சற்று குறைந்து ரூ. 400-க்கு மேல் விற்பனையாகி வருகிறது. டீசல் விலையும் இதேபோல் உயர்ந்துள்ளதால், போக்குவரத்துச் செலவுகள் மற்றும் சரக்குக் கட்டணங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.

இதன் காரணமாக பொதுப் போக்குவரத்து கட்டணங்கள், உணவுப் பொருட்கள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சில பகுதிகளில் பணவீக்கம் 300 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும், இதனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் வாழ வழியின்றி தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.