ஈரானிய துறைமுகங்களுக்கான அமெரிக்காவின் கடல்சார் முற்றுகையை உடைத்துக் கொண்டு நுழைய முயன்ற ‘லியான் ஸ்டார்’ (லயன் ஸ்டார்) என்ற பிரம்மாண்ட வர்த்தகக் கப்பல் மீது அமெரிக்க இராணுவம் நடத்தியுள்ள ஏவுகணைத் தாக்குதல் உலக நாடுகளை உலுக்கியெடுத்துள்ளது!
காம்பியா நாட்டுக் கொடியுடன் ஈரானிய துறைமுகம் நோக்கிச் சென்ற அந்தச் சரக்குக் கப்பலுக்கு அமெரிக்கப் படைகள் 20-க்கும் மேற்பட்ட முறை கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளன; ஆனால், அதையெல்லாம் மீறி முன்னேறியதால், அதன் என்ஜின் அறையை (Engine Room) குறிவைத்து அமெரிக்கா ஏவுகணையைச் செலுத்தி கப்பலை முற்றிலுமாகச் செயலிழக்கச் செய்துள்ளது.
இதனால், சனிக்கிழமையன்று ஓமான் வளைகுடாவில் அந்தப் பெரிய கப்பல் இயந்திரம் இல்லாமல் அநாதையாகத் தத்தளித்துக் கொண்டிருந்த காட்சி செயற்கைக்கோள்களில் பதிவாகியுள்ளது. பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்திய கூட்டுத் தாக்குதலால் மத்திய கிழக்கில் முழு அளவிலான போர் வெடித்த நிலையில், அதற்குப் போட்டியாக ஏப்ரல் 17 அன்று ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடியது.
இதற்குப் பதிலடியாகவே அமெரிக்கா இந்த கடல் முற்றுகையைக் கொண்டு வந்தது. ஏப்ரல் 7 முதல் ஒரு தற்காலிகப் போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், தற்போது அது மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்கப்படுமா, ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடருமா என்ற மிகப்பெரிய சஸ்பென்ஸ் நீடிக்கிறது.
இதற்கிடையே, ஹோர்முஸ் ஜலசந்தியைச் சுற்றி அச்சுறுத்தலாக வந்த ஈரானின் 4 ஆளில்லா போர் விமானங்களை (Drones) அமெரிக்க மத்திய கட்டளைப் படைகள் சுட்டு வீழ்த்திய கையோடு, ஒரு ஈரானிய இராணுவத் தளத்தின் மீதும் புதிய தற்காப்புத் தாக்குதல்களைத் தொடுத்துள்ளதால், சர்வதேச அரங்கில் இப்போதே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது!
