சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் திடீரென பெரும் பரபரப்பும் பதற்றமும் தொற்றிக் கொண்டது.
கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது, கோஷ்டி மோதல் காரணமாக உட்கட்சி பூசல் வெடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் இரு தரப்பு ஆதரவாளர்கள், பொது இட என்றும் பாராமல் ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர்.
வாக்குவாதம் முற்றிப் போய் ஒருகட்டத்தில் பயங்கர கைகலப்பாக மாறியதால், அங்கிருந்த நாற்காலிகள் மற்றும் பொருட்கள் சேதமடைந்தன.
இந்த மோதலில் தொண்டர்கள் ஒருவரையொருவர் குத்தியும், சட்டையைப் பிடித்து இழுத்தும் முரட்டுத்தனமாகத் தாக்கிக் கொண்டதால் சத்தியமூர்த்தி பவன் வளாகமே ஒரு நிமிடம் போர்க்களமாக மாறியது.
காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி மோதல் இப்படி வீதிக்கு வந்து மோதிக்கொள்ளும் அளவுக்கு வன்முறையாக மாறிய சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மோதலில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
