அடோப் நிறுவனத்தின் இயக்குநரே தனது மகனுக்கு வேலை கேட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பது, தற்போதைய ஐடி வேலைவாய்ப்பு சந்தையின் மோசமான நிலையை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. தப்பார் பொறியியல் கல்லூரியில் கணினிப் பொறியியல் முடித்த தனது மகனுக்கு, ஒரு முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தில் கிடைத்த வேலைவாய்ப்பு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதால், அவர் பகிரங்கமாக பரிந்துரைகளைக் கேட்டுள்ளார்.
மேலும் ஒரு உயர் பதவியில் இருப்பவருக்கே இத்தகைய சூழல் என்றால், சாதாரண பட்டதாரிகளின் நிலை என்னவென்ற கேள்வியை இது எழுப்பியுள்ளது. இந்தச் சம்பவம் ஐடி துறையில் நிலவும் பணிநீக்கங்கள் மற்றும் வேலைவாய்ப்பு நிச்சயமற்ற தன்மையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் “தந்தை என்ற முறையில் மகனுக்கு உதவ நினைத்தாலும், கார்ப்பரேட் விதிகளால் சொந்த நிறுவனத்திலேயே வேலை வாங்கித் தர முடியாத கையறு நிலையில் அவர் உள்ளார்” என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ‘அடோப் இயக்குநரின் மகனுக்கே இந்த நிலை என்றால், ஐடி துறையின் இன்றைய சூழல் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது’ எனப் பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் ஆதங்கத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.
