பிரபல மாடல் மற்றும் திரை நடிகையான ட்விஷா சர்மா (33) கடந்த மே 12-ஆம் தேதி போபாலில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறை மற்றும் கடுமையான மன உளைச்சல் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக ட்விஷாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், அவரது கணவர் சமர்த் சிங், குழந்தையின் தந்தை யார் எனக் கேள்வி எழுப்பி ட்விஷாவின் கர்ப்பத்தைக் கலைக்க கட்டாயப்படுத்தியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்ட நிலையில், போபால் நீதிமன்றம் ட்விஷாவின் கணவர் சமர்த் சிங் மற்றும் அவரது மாமியார் கிரிபாலா சர்மா ஆகிய இருவரையும் 5 நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், சிபிஐ காவலில் விசாரணையை எதிர்கொண்டு வரும் சமர்த் சிங், அங்கு ஜப்பானிய குற்றவியல் த்ரில்லர் நாவலான ‘பட்டர்’ புத்தகத்தை வாசித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எழுத்தாளர் அசாகோ யுசுகி எழுதிய இந்நாவல், பல பணக்காரர்களை ஏமாற்றிக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, இறுதியில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.
இந்த மர்ம நாவலை சிபிஐ காவலில் இருந்தபடி சமர்த் சிங் தீவிரமாக வாசித்து முடிக்கும் தருவாயில் உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல், ட்விஷா சர்மாவின் மரண வழக்கோடு ஏதேனும் தொடர்பு உடையதா என்ற கோணத்தில் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
