“என்னால் சிக்ஸர் அடிக்க முடியும் போது ஏன் சிங்கிள் ரன் எடுக்க வேண்டும்?” என்று தனது 10 வயதிலேயே பயிற்சியாளரிடம் மிரட்டலாகக் கேட்ட சிறுவன் தான் இன்று ஐபிஎல் 2026 தொடரில் பல சாதனைகளைப் படைத்து வரும் வைபவ் சூர்யவன்ஷி.
வெறும் 15 வயதே ஆன இந்த இளம் இடதுகை பேட்ஸ்மேன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன் பக்கம் திருப்பியுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 36 பந்துகளில் சதம் விளாசியதுடன், மற்றொரு போட்டியில் 29 பந்துகளில் 12 சிக்ஸர்களுடன் 97 ரன்களும், குஜராத் அணிக்கு எதிரான குவாலிபயர் 2 போட்டியில் 96 ரன்களும் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.
இவரது அசாத்திய அதிரடியைக் கண்டு வியந்த கிறிஸ் கெயில், இவரை ‘புதிய சிக்ஸர் மெஷின்’ என்று பாராட்டியதோடு, ஐபிஎல் தொடர் ஒன்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த தனது சாதனையை வைபவ் முறியடித்துள்ளதாகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷியின் இந்த அதிரடி ஆட்டத்திற்கு அவரது பயமற்ற மனநிலையும், கடின உழைப்பும் தான் முக்கியக் காரணம் என்று அவரது சிறுவயது பயிற்சியாளர்களான மணீஷ் ஓஜா மற்றும் விகாஸ்குமார் கூறுகின்றனர்.
ரஞ்சிக் கோப்பையில் பிகார் அணிக்காக விளையாடியபோதும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் திராவிடிடமும் “முதல் பந்தே கிடைத்தால் அதை பறக்க விட்டுவிடுவேன்” என்று கூறும் அளவுக்கு வைபவ் அதீத தன்னம்பிக்கை கொண்டவராக இருந்துள்ளார்.
சிறு வயதில் பயிற்சியில் ஈடுபடுவதற்காக சமஸ்திபூரிலிருந்து பாட்னா வரை 100 கிலோ மீட்டருக்கும் மேல் பயணம் செய்து வந்து தீவிரமாகப் பழகியுள்ளார்.
நெட் பயிற்சியின் போது தான் அவுட் ஆகும் பலவீனங்களைச் சரிசெய்ய மணி கணக்கில் உழைக்கும் குணம் கொண்டவர் என்றும், அவரது ஆக்ரோஷமான பேட்டிங் பாணிக்குக் குறுக்கே நிற்காமல் அவருக்குப் பயிற்சியாளர்கள் அளித்த முழு சுதந்திரமே அவரது இந்த அசாத்திய வளர்ச்சிக்குக் காரணம் என்றும் பயிற்சியாளர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
இவரது அலாதியான பேட்டிங் நுட்பம் குறித்துப் பாராட்டியுள்ள கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், வைபவ்வின் பேட் ஸ்விங் அற்புதமாக உள்ளதாகவும், பந்து வீசப்படும் போது அவரது கால்கள் நகரும் விதம் எவ்வித தடையும் இன்றி எளிதாக சிக்ஸர்களைப் பறக்கவிட உதவுகிறது என்றும் எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார்.
மேலும், முன்னாள் வீரர்கள் ஆகாஷ் சோப்ரா மற்றும் ஆரோன் ஃபிஞ்ச் ஆகியோர் இவரது பேட்டிங் பாணியை ஆய்வு செய்து, வைபவ் பேட்டை உயரமாகக் கையாள்வதையும், தலையை மிகவும் நிலைத்தன்மையுடன் வைத்திருப்பதையும் பாராட்டியுள்ளனர்.
நடப்பு சீசனில் நீளமான கைப்பிடி கொண்ட பேட்டை பயன்படுத்தி, மைதானத்தின் அனைத்து திசைகளிலும் ரன்களைக் குவித்து வரும் வைபவ் சூர்யவன்ஷி, கிரிக்கெட் உலகின் அடுத்த சூப்பர் ஸ்டாராக உருவெடுத்து வருகிறார் என்பதில் சந்தேகமில்லை.
