தென்னிந்திய முன்னணி நடிகர் ராம் சரண், தனது பாதுகாப்புக்காகக் கெவின் குயிண்டோ என்ற ஆப்பிரிக்கப் பகுதியைச் சேர்ந்த சர்வதேச மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் வீர்ரைத் தனது பாதுகாவலராக நியமித்துள்ளது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
‘பெட்டி’ என்ற தனது புதிய திரைப்படத்தின் விளம்பரப் பணிகளுக்காக இந்தியா முழுவதும் பயணம் செய்து வரும் ராம் சரணுடன், இந்த பாடி கார்டும் எப்போதும் கூடவே வலம் வருகிறார். காம்பியா நாட்டைச் சேர்ந்தவரான கெவினின் அசல் பெயர் அப்து சோயே என்பதாகும்.
இவர் வெறும் 30 வினாடிகளில் 15 முறை எதிரிகளை உதைக்கும் அசத்தலான தற்காப்புக் கலைத் திறன் கொண்டவர் என்பதால், எந்தவொரு ஆபத்தான சூழலையும் நொடியில் கையாளும் வல்லமை படைத்தவர்.
இத்தாலியின் முன்னாள் மிடில்வெயிட் எம்.எம்.ஏ சாம்பியனான கெவின், பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார் என்பதோடு, ஹாலிவுட் ஆக்ஷன் பட நாயகன் போன்ற தனது கட்டுமஸ்தான உடலமைப்பால் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் மிகவும் பிரபலமானவராக விளங்கி வருகிறார்.
பொதுவாக வி.ஐ.பி மற்றும் பிரபலங்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் இவருக்கு, நடிகர் ராம் சரண் மாதத்திற்குச் சுமார் 3 முதல் 5 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது ஒரு சாதாரண பாதுகாப்பு ஊழியரின் ஊதியத்தை விடப் பல மடங்கு அதிகமாகும். இருப்பினும், இவர் ராம் சரணின் நிரந்தரப் பாதுகாவலரா அல்லது இந்தத் திரைப்பட விளம்பரத்திற்காக மட்டும் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்த விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
