மனிதர்களின் ஆயுட்காலத்தை 150 ஆண்டுகள் வரை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் விவாதித்ததாகக் கசிந்த ஒலிப்பதிவு உலகளவில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, மனித ஆயுளை நீட்டிப்பதற்கான அதிநவீன ஆராய்ச்சிகளில் ரஷ்ய விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், இதற்காக 26 பில்லியன் டாலர் (சுமார் 25 டிரில்லியன் ரூபாய்) ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கிரெம்ளினில் இருந்து வரும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அதிபர் புதினின் நேரடி மேற்பார்வையில், அவரது மகள் மரியா மற்றும் விஞ்ஞானி மிகைல் கோவல்சுக் ஆகியோர் முன்னெடுக்கும் இந்தத் திட்டம் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் ரஷ்ய ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 68 ஆண்டுகளாக மட்டுமே இருப்பது, இந்த ஆராய்ச்சிக்கான முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த 2024-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் மூன்று முக்கியப் பணிகள் வேகம் பெற்றுள்ளன. முதலாவதாக, செல்களின் முதுமையைத் தடுக்கும் மரபணு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன; இரண்டாவதாக, 3D பயோபிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் சேதமடைந்த மனித உறுப்புகளைச் சீரமைக்கும் பணிகள் நடக்கின்றன; மூன்றாவதாக, மரபணுப் பொருத்தம் கொண்ட சிறு பன்றிகளுக்குள் மனித உறுப்புகளை வளர்க்கும் முயற்சிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே எலியின் தைராய்டு மற்றும் மனித குருத்தெலும்புத் திசுக்களை உயிரி அச்சிட்டு வெற்றி கண்டுள்ள ரஷ்ய விஞ்ஞானிகள், இந்த முழுமையான உறுப்பு மாற்று தொழில்நுட்ப செயல்முறைகளை 2030-ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய இலக்கு வைத்துள்ளனர்.
