கடந்த 2023-ஆம் ஆண்டு கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றபோது, சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகிய இருவரும் தலா பாதி ஆட்சிக்காலம் முதலமைச்சராக இருக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இதுவரை முதலமைச்சராக இருந்த சித்தராமையா, நீண்ட இழுபறிக்குப் பிறகு தனது பதவியை டி.கே.சிவகுமாருக்கு விட்டுக்கொடுத்துள்ளார். நேற்று அவர் ஆளுநர் மாளிகையில் கொடுத்த ராஜினாமா கடிதத்தை, இன்று ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஏற்றுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து, கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையை முடிவு செய்வதற்காக டி.கே.சிவகுமார் மற்றும் சித்தராமையா ஆகிய இருவரும் டெல்லிக்கு விரைந்துள்ளனர். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்த சித்தராமையா, புதிய அமைச்சரவையில் தனது ஆதரவாளர்களைச் சேர்ப்பது குறித்தும், தனது மகன் யதீந்திர சித்தராமையாவுக்குத் துணை முதலமைச்சர் பதவி மற்றும் முக்கியத் துறை வழங்குவது குறித்தும் தீவிர ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் அவர் சந்தித்துப் பேசினார். முன்னதாக, தனக்கு எம்பி சீட் தர முன்வந்த காங்கிரஸ் தலைமையிடம், தான் கடைசி வரை கர்நாடக அரசியலில் மட்டுமே நீடிப்பேன் என்று சித்தராமையா கூறியதாகத் தெரிகிறது. இந்நிலையில், இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் டி.கே.சிவகுமாரை புதிய முதலமைச்சராக முன்மொழிந்து, புதிய அமைச்சரவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.