கன்னியாகுமரி மாவட்ட கனிம வளங்களை எடுத்துச் செல்வது தொடர்பாக, திமுகவின் முன்னாள் அமைச்சர்களான அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மனோ தங்கராஜ் ஆகிய இருவருக்கு இடையே எழுந்துள்ள பகிரங்கக் கருத்து வேறுபாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் ஆஸ்டின் எம்.எல்.ஏ. ஆகியோர் குமரி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, கனிம வளங்களைக் கொண்டு செல்ல அனுமதிக்கக் கோரி மனு அளித்திருந்தனர்.
இந்த நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்து, முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் சமூக வலைதளத்தில் ஒரு கண்டன வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் திமுகவிற்குள் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், சென்னை வந்திருந்த அனிதா ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் இதுகுறித்துக் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், “நாகர்கோவிலில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது, அங்கு முறைப்படியான அனைத்து ஆவணங்கள் இருந்தும் சுமார் 400 லாரிகள் வரிசையாக மறித்து நிறுத்தப்பட்டிருந்ததை நேரில் கண்டேன். பாதிக்கப்பட்ட லாரி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்திற்காகக் குரல் கொடுக்கும் நோக்கிலேயே, உள்ளூர் எம்.எல்.ஏ. ஆஸ்டினை அழைத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியரைச் சந்தித்தேன்.
மேலும் நேர்மையாகத் தொழில் செய்பவர்களுக்கு எந்த அரசாங்கமும் தடை விதிக்கக் கூடாது என்றே கோரிக்கை வைத்தேன். அப்போது செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, கேரளா ஒன்றும் பாகிஸ்தானில் இல்லை, இந்தியாவில்தான் இருக்கிறது என்று ஒரு வார்த்தை கூறினேனே தவிர, கனிம வளங்களைக் கேரளாவுக்குக் கடத்த வேண்டும் என்று நான் கூறவில்லை. கனிம வளங்களே வரவில்லை என்றால் நாகர்கோவில் மக்கள் எப்படி வீடு கட்டுவார்கள்? இதற்காகக் குரல் கொடுத்தால், என் சொந்தக் கட்சியைச் சேர்ந்த சகோதரர் மனோ தங்கராஜ் தேவையின்றி மனக்குழப்பத்தில் ஆழ்ந்து பேசி வருகிறார்” என்று விளக்கமளித்தார்.
